Monday, March 23, 2009

அடுத்தவன் பெண்டாட்டியுடன் சிகரட் புகைக்கலாமா?


படத்தில் உள்ளவர்கள் யார் யார் தெரிகிறதா?


Friday, March 20, 2009

வருண் காந்தியின் ஆணவம்

“இந்துக்களுக்கு எதிராக யாராவது கைநீட்டினால், இந்துக்கள் பலவீனமானவர்கள் என்றோ அவர்கள் பின்னால் யாருமில்லை என்றோ யாராவது நினைத்தால், பகவத் கீதை மீது ஆணையாகச் சொல்கிறேன்... நான் அவர்களது கைகளை வெட்டுவேன்” என முழங்கி இருக்கிறார் ஒருவர்.பெயர் என்னமோ வருண் காந்தியாம்.

இது குறித்து தினமலரின் இன்றைய இணையப் பக்கத்தில் வெளியாகி இருக்கும் செய்தி கீழே:

"புதுடில்லி : சர்ச்சைக்குரிய விதத்தில் வருண்காந்தி பேசியதற்கு பா.ஜ., எந்த விதத்திலும் பொறுப்பில்லை என அக்கட்சி தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துள்ளது. உ.பி., மாநிலம் பிலிபித் தொகுதியில் பிரசாரத்தின் போது வருண்காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷன் பா.ஜ., கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது . இந்த நோட்டீஸ் குறித்து கருத்து ‌தெரிவித்துள்ள பா.ஜ.., வருண் பேச்சுக்கு நாங்கள் பொறுப்பல்ல, தேர்தல் கமிஷன் வருண் பேச்சு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் . இதற்காக ஒரு நிபுணர் குழுவையும் அமைக்க வேண்டும் . இவ்வாறு பா.ஜ., கூறியுள்ளது . மேலும் இது தொடர்பாக பா.ஜ., வுக்கு அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது."

என்னமோ சொல்வாங்களே!....ம்புகிற வரைக்கும் ....ம்பிட்டு உப்புக் கரிக்கிதுன்னானாம்.பழமொழி அசிங்கமானது தான். ஆனால் இவர்கள் பேசுகிற பேச்சும்,பின்னர் அதை மறுக்கிற முறையும் பழமொழியைவிட அசிங்கமாக இருக்கிறதே!

ஓட்டுப் போடும் மக்களை என்னவென்று தான் நினைக்கிறார்கள் இந்த அரசியல்வாதிகள்?

Monday, March 16, 2009

மகனை அடிக்கப் பாய்ந்த சீனியர் லாயர்.

"வெற்றி வெற்றி சக்ஸஸ்"என்று கூவிக்கொண்டே வீட்டில் நுழைந்த மகன் கிருஷ்ண குமாரை ஏறிட்டுப் பார்த்தார் தந்தை ராகவன்.


ராகவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனியர் லாயர்.அவரது ஒரே மகன் கிருஷ்ணகுமாரையும் வக்கீலுக்குப் படிக்க வைத்து,அவனும் ஒருவழியாகப் பாஸாகி இன்று தான் முதல் முதலாக நீதிமன்றத்திற்குச் சென்று வந்துள்ளான்.


"என்னடா வெற்றி,சக்ஸஸ்ன்னு கூவிகிட்டே வர்றே.கோர்ட்டில் என்ன ஏதாவது பிரச்சனையா?"


"அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா.நீங்க ரொம்ப வருஷமா வாதாடிகிட்டு வந்தீங்களே.ஒரு நாப்பது வருஷம் இருக்குமாப்பா.அந்தக் கேஸ் இன்னிக்கு விசாரணைக்கு வந்துச்சு.அதுலே நான் பிரமாதமா வாதாடி ஜெயிச்சுபுட்டேன்.ஜட்ஜ் கூட என்னைப் பாராட்டினாருப்பா."


"டேய்,டேய்.எந்தக் கேஸ்ரா.அந்த மாங்குளம் ஜமீந்தார் கேஸா?


"ஆமப்பா."


"அட பாவிப்பய மவனே.இதுக்காடா ஒன்னை வக்கீலுக்குப் படிக்க வெச்சேன்.மொத்தப் பொழைப்பையே கெடுத்திட்டீயேடா.உன்னை என்ன செய்யறேன்.பாரு."என்றவாறே மகனைநோக்கிப் பாய்ந்தார் ராகவன்.


"என்னை ஏம்பா திட்றீங்க?நான் நல்ல விதமாத்தானே வாதாடி ஜெயிச்சு வந்துருக்கேன்?"


"உன் வாதத்தைலே இடி விழ.இந்த ஒரு கேஸை வச்சுத்தாண்டா இவ்வளவு சொத்து சேர்த்து,கார் பங்களா வாங்கி,ஒங்கம்மாவையும் கட்டிகிட்டு ஒன்னையும் பெத்துப் படிக்க வச்சேன்.இந்தக் கேஸை வச்சு செய்ய வேண்டியதுன்னு இன்னும் எவ்வளவோ இருக்கு.என் எதிர்காலத்தையே ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டியேடா பாவி"


மகனை மொத்த ஆரம்பித்தார் ராகவன்.

Sunday, March 15, 2009

கோழிக்கறியில் கலப்படம்

கோர்ட்டில் ஒரு சுவாரசியமான வழக்கு விசாரணைக்கு வந்தது.

கோழிக்கறியுடன் குதிரைக்கறியைக் கலப்படம் செய்து விற்றதாக வழக்கு.

நீதிபதி குற்றவாளியைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.

“கோழிக்கறியுடன் குதிரைக்கறியைக் கலப்படம் செய்து விற்றதாக உன் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருகிறது.நீ என்ன சொல்கிறாய்?”

“ஆமா எஜமான்.அப்படிக் கலப்படம் செஞ்சுதான் வித்தேன்”

குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

நீதிபதி தீர்ப்பை எழுத ஆரம்பித்தார்.

அப்போது அரசுத் தரப்பு வக்கீல் எழுந்து நீதிபதியிடம் முறையிட்டார்.

“கனம் நீதிபதி அவர்களே.தீர்ப்பை அவ்வளவு சீக்கிரம் எழுதி விடாதீர்கள்.குற்றத்தின் தன்மை கடுமையானது.கொஞ்சம் யோசித்து தீர்ப்பு வழங்குங்கள்”என்றார்.

"அதான் குற்றத்தை ஒப்புக் கொண்டானே?”

“இல்லை யுவர் ஆனர்.நான் குற்றவாளியிடம் கேள்வி கேட்க வேண்டும்.அப்போது தான் குற்றத்தின் தன்மை உங்களுக்குப் புரியும்”

வேண்டாவெறுப்பாக நீதிபதி சம்மதித்தார்.

அரசு வழக்குரைஞர் குற்றவாளியைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.

“எந்த அளவுக்கு கலப்படம் செய்தாய்?”

“ஃபிப்டி ஃபிப்டி எஜமான்”

உடனே நீதிபதி அரசு வழக்குரைஞரிடம் கேட்டார்.

“பார்த்தீர்களா.ஃபிப்டி ஃபிப்டி என்றால் ஒரு கிலோ கோழிக் கறிக்கு ஒரு கிலோ குதிரைக் கறி தானே!இப்போ தீர்ப்பு எழுதவா?”

“கொஞ்சம் பொறுங்கள் யுவர் ஆனர்.இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு விடுகிறேன்.அப்போது தான் குற்றத்தின் கடுமை தெளிவாகும்.”

“சரி சரி.கேளுங்கள்”

“ஏம்பா.ஃபிப்டி ஃபிப்டி என்றாயே.அதை விளக்கமாகச் சொல்.”

“ஐயே!இது கூடவா புரியவில்லை.?ஒரு கோழிக்கு ஒரு குதிரை தாங்க கலந்தேன்.”

பாண்டவர்களும் துரியோதனனும்

பனிரெண்டு ஆண்டுகள் வன வாசமும் ஓராண்டு அஞ்ஞாத வாசமும் முடிந்தபின் பாண்டவர்கள் ஐவரும் துரியோதனன் முன்பு ஆஜரானார்கள்.

“தம்பி துரியோதனா.பதின்மூன்றாண்டு வனவாசம் முடிந்து விட்டது.”

“அதுக்கென்ன இப்போ?”

“எங்கள் ராஜ்ஜியத்தைத் திருப்பித் தா.”


“ஒப்பந்தத்தில் அப்படி எல்லாம் இல்லையே!சூதாட்டத்தில் தோற்றால் ராஜ்ஜியத்தை இழந்து வனவாசமும் அஞ்ஞாத வாசமும் போக வேண்டும் என்று தானே ஒப்பந்தம்.?”

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது துரியோதனா.”

“ஹூஹும்.தர மாட்டேன்.”

“சரி.ஐந்து நகரமாவது கொடு.”

“தர மாட்டேன்.”

“ஐந்து கிராமமாவது கொடு.”

“தர மாட்டேன்."

“ஐந்து தெருக்களாவது கொடு.”

“தர மாட்டேன்.”

“சரி.ஐந்து வீடுகளாவது கொடு.”

துரியோதனன் யோசித்தான்.

“சரி.வீடு வேண்டும் என்று ஆளுக்கு ஒவ்வொரு மனு எழுதி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு மனுச் செய்யுங்கள்.காலக்கிரமத்தில் உங்களுக்கு வீடுகள் கிடைக்கும்.”என்றான்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு மனுச் செய்து வீடுகள் பெறுவதை விட மீண்டும் காட்டுக்கே சென்று விடலாம் என்று முடிவு செய்து பாண்டவர்கள் ஐவரும் காட்டுக்கே திரும்பி விட்டார்கள்.

வழக்குரைஞர்கள் சங்கம் கொண்டுவரவிருக்கும் 11 தீர்மானங்கள்

நாளை 16ந் தேதி முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கம்போல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் வழக்குரைஞர்கள் ஆஜராகாத பட்சத்தில் இலவச சட்ட ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கும் வழக்குரைஞர்களைக் கொண்டு வழக்குகள் நடத்தப்படுமென்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்குரைஞர்கள் சங்கம் எதிர்காலத்தில் நீதிமன்றங்களில் ஆஜராகும்போது நீதிபதிகளை"மை லார்ட்"என்றோ "யுவர் ஆனர்"என்றோ அழைக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இப்படியே இவர்களின் போராட்டம் தொடருமானால் எதிர்காலத்தில் கீழ்க் காணும் தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது.


1.கருப்பு கவுன்,கோட் போட மாட்டோம்.இவை போடாமலேயே ஆஜராவோம்.

2.வழக்குரைஞர் எனறு அடையாளம் காண்பிக்கக் கூடிய வெள்ளைக் காலர் அணியமாட்டோம்.

3.வெள்ளை சர்ட் வெள்ளை பேண்ட் அணிய மாட்டோம்.

4.கலர் கலராக சட்டை,டீசர்ட்,கலர் பேண்ட்,பெர்முடாஸ் போன்றவை அணிந்து கொண்டு ஆஜராவோம்.

5.ஷூ போட மாட்டோம்.செருப்பு போட்டுக் கொண்டு வருவோம்.

6.ஷூ,செருப்பு எதுவும் போடாமல் வெறுங்காலுடன் ஆஜராவோம்.

7.நீதிமன்றத்திற்குள் நுழையும்போது நீதிபதியை வணங்க மாட்டோம்.நீதிபதி போகும் போதும் வணங்க மாட்டோம்.

8.நீதிபதி வரும்போது மரியாதை தெரிவிக்கும் விதத்தில் எழுந்து நிற்க மாட்டோம்.

9.நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது அவ்வப்போது "சத்தம் போடாதீங்க"என்று டவாலி சத்தமாகக் கூறுவார்.அதைப் புறக்கணிக்கும் விதமாக அனைவரும் சத்தம் போட ஆரம்பிப்போம்.

10.வழக்கு விசாரணை நடக்கும்போது இருக்கையில் அமர்ந்துகொண்டே தான் விசாரணையில் பங்கேற்போம்.குறுக்கு விசாரணை,வாதப் பிரதிவாதங்கள் அனைத்தும் அமர்ந்து கொண்டே செய்வோம்.

11.ஒவ்வொரு நாளும் நீதிபதி விசாரணை ஆரம்பிக்குமுன்னர்,"எங்களுக்குச் சாதகமாக மட்டுமே தீர்ப்பு வழங்குவேன்"என்று சத்தியப் பிரமாணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவோம்.