Sunday, March 15, 2009

கோழிக்கறியில் கலப்படம்

கோர்ட்டில் ஒரு சுவாரசியமான வழக்கு விசாரணைக்கு வந்தது.

கோழிக்கறியுடன் குதிரைக்கறியைக் கலப்படம் செய்து விற்றதாக வழக்கு.

நீதிபதி குற்றவாளியைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.

“கோழிக்கறியுடன் குதிரைக்கறியைக் கலப்படம் செய்து விற்றதாக உன் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருகிறது.நீ என்ன சொல்கிறாய்?”

“ஆமா எஜமான்.அப்படிக் கலப்படம் செஞ்சுதான் வித்தேன்”

குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

நீதிபதி தீர்ப்பை எழுத ஆரம்பித்தார்.

அப்போது அரசுத் தரப்பு வக்கீல் எழுந்து நீதிபதியிடம் முறையிட்டார்.

“கனம் நீதிபதி அவர்களே.தீர்ப்பை அவ்வளவு சீக்கிரம் எழுதி விடாதீர்கள்.குற்றத்தின் தன்மை கடுமையானது.கொஞ்சம் யோசித்து தீர்ப்பு வழங்குங்கள்”என்றார்.

"அதான் குற்றத்தை ஒப்புக் கொண்டானே?”

“இல்லை யுவர் ஆனர்.நான் குற்றவாளியிடம் கேள்வி கேட்க வேண்டும்.அப்போது தான் குற்றத்தின் தன்மை உங்களுக்குப் புரியும்”

வேண்டாவெறுப்பாக நீதிபதி சம்மதித்தார்.

அரசு வழக்குரைஞர் குற்றவாளியைப் பார்த்துக் கேள்வி கேட்டார்.

“எந்த அளவுக்கு கலப்படம் செய்தாய்?”

“ஃபிப்டி ஃபிப்டி எஜமான்”

உடனே நீதிபதி அரசு வழக்குரைஞரிடம் கேட்டார்.

“பார்த்தீர்களா.ஃபிப்டி ஃபிப்டி என்றால் ஒரு கிலோ கோழிக் கறிக்கு ஒரு கிலோ குதிரைக் கறி தானே!இப்போ தீர்ப்பு எழுதவா?”

“கொஞ்சம் பொறுங்கள் யுவர் ஆனர்.இன்னும் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டு விடுகிறேன்.அப்போது தான் குற்றத்தின் கடுமை தெளிவாகும்.”

“சரி சரி.கேளுங்கள்”

“ஏம்பா.ஃபிப்டி ஃபிப்டி என்றாயே.அதை விளக்கமாகச் சொல்.”

“ஐயே!இது கூடவா புரியவில்லை.?ஒரு கோழிக்கு ஒரு குதிரை தாங்க கலந்தேன்.”

No comments:

Post a Comment