Sunday, April 26, 2009

ஆத்திகப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இன்றைய தினமலரில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு சமயம் லட்சுமி கண்ணுவ முனிவரின் சாபத்தால் மான் வடிவை அடைந்தாள்.பல இடங்களில் அலைந்து திரிந்தபின்,திருமால் யோக மூர்த்தியாக அமர்ந்திருந்த பர்ணசாலைக்கு வந்தாள்.அவளைக்கண்ட திருமால் அன்புடன் பார்த்தார்.அந்த மான் கருவுற்றது. கருவுற்ற அவள் வள்ளிகிழங்கு எடுத்த குழியில் குழந்தையை இட்டாள்.வேடர்கள் அக்குழந்தையை எடுத்து வளர்த்தனர்.வள்ளி என்னும் பெயரில் வளர்ந்த அந்தப்பெண் தவம் செய்து முருகனை மணந்தாள்.



இப்படி இன்றைய தினமலரில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சரித்திரம் அதாவது "வள்ளி அவதார மகிமை" குறித்து யாருக்காவது தெரியுமா?



சக வலைப்பதிவர்களான குமரன்,சிவமுருகன்,என்றென்றும் அன்புடன் பாலா,வீஎஸ்கே,கீதா சாம்பசிவம், G.ராகவன் போன்ற ஆத்திகத் தோழர்கள்
மேற்கொண்டு விளக்கம் அல்லது பதில் அளிக்க வேண்டுகிறேன்.



எந்தச் செய்தியையும் பகுத்தறிந்து அலசும் கோவிகண்ணன் போன்றோரும் தங்களுக்குத் தெரிந்தால் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.


நான் ஒரு ஆத்திகன்.தினமும் இறைவனை வணங்காமல் எந்தப் பணியும் தொடங்கியதே இல்லை.எனை ஆளும் முருகன் மீது ஆணையாகக் கூறுகிறேன்.யாரையும் புண்படுத்துவதோ கிண்டல் செய்வதோ என் வேலை இல்லை.இப்படி ஒரு செய்தி நாடறிந்த தமிழ் நாளிதழில் வெளியாகும் போது மனது கொஞ்சம் அதிகமாகவே நெருடுகிறது.எனவே தான் கேட்கிறேன்.என்னைத் தெளிவடைய வைக்கும்ப‌டி கேட்டுக் கொள்கிறேன்.

13 comments:

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்கள்..

கோவி.கண்ணன் said...

//எந்தச் செய்தியையும் பகுத்தறிந்து அலசும் கோவிகண்ணன் போன்றோரும் தங்களுக்குத் தெரிந்தால் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
//

புராணங்க்களை உண்மை என்று நம்புவோர் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் ஆராய்ச்சி எல்லாம் நடத்தக் கூடாது !

உருவ வழிபாடு தவறு என்னும் ஆத்திகர்கள் மேற்கண்ட கதை வெறும் உருவகம் என்பார்கள், வள்ளி இச்சா சக்தி, தெய்வானை கிரியா சக்தி, முருகன் பரப்பிரம்மம் என்பார்கள்.

எனக்கு தெரிஞ்ச விளக்கம் சொல்லிவிட்டேன்.

Anonymous said...

வியர்வையிலேயே கருக்கட்டின சம்பவங்கள் உண்டு.இது சும்மா யுயூபி.

மாண்புமிகு பொதுஜனம் said...

வாழ்த்துகளுக்கு நன்றி அறிவே தெய்வம்.

கோவி.கண்ணன் said...
..//‌உருவ வழிபாடு தவறு என்னும் ஆத்திகர்கள் மேற்கண்ட கதை வெறும் உருவகம் என்பார்கள், வள்ளி இச்சா சக்தி, தெய்வானை கிரியா சக்தி, முருகன் பரப்பிரம்மம் என்பார்கள்.//

ஆத்திகப் பெரியோர்களிடம் விளக்கம் பெற்ற பின் தங்கள் கருத்துக்கு வருகிறேன்.நன்றி கோவிகண்ணன்.

நன்றி புகழினி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இப்படி ஒரு செய்தி நாடறிந்த தமிழ் நாளிதழில் வெளியாகும் போது மனது கொஞ்சம் அதிகமாகவே நெருடுகிறது//

இதில் நெருடும் அளவுக்குத் தீமை எதுவும் அமைந்து விடலையே-ங்க! தீமையும், துன்புறுத்தலும் தான் நெருட வேண்டிய விஷயங்கள்!

இக்காலப் பழக்க வழக்கங்களுக்கு எதிரான நெருடல் கூட இதில் அதிகம் இல்லையே! உங்களுக்கு ஏன் இந்த வீண் சஞ்சலம்? "எனை ஆளும் முருகன் மீது ஆணையாகக் கூறுகிறேன்" என்று நீங்க சொன்னதால், மேற்கொண்டு சொல்லுகிறேன்!

நீங்கள் குறிப்பிட்டது போல் திருமால் முனிவராகவோ, இலக்குமி மானாகவோ எல்லாம் பிறக்கவில்லை! இதெல்லாம் ஒரு கதையைச் சொல்லும் போது, ரசத்தை அவரவர் கூட்டிக் கூட்டி, பாமரர்களும், படித்த "பகுத்தறிவாளர்களுமே" தாமாகப் புனைந்து கொள்வது தான்! :)

எந்தவொரு சமயத்திலும் கதைகளோடு கூடிய உட்புனைவுகள் இருக்கும்! இந்தக் கால ஹாரி பாட்டர் போன்ற அறிவியல் கதைகளில் கூட உள் மாந்தர்/அறி-புனை கதைகள் என்றெல்லாம் சொல்கிறார்கள்!

இப்படித் தான் பல மதங்களில் கன்னியர் சூல் கொள்வதும், குழந்தையைக் காட்டு விலங்குகள் காத்தல் போன்ற இன்ன பிறவும் வரும்! மனிதக் கருவால் உருவாகாத "பரிசுத்தம்" என்பதைக் காட்ட இப்படியான அதீத முறைகள் கதைகளில் சொல்வதுண்டு! அவ்வளவு தான்! அன்னை மரியாளுக்கும் இப்படிச் சொல்லப்படுவது உண்டு!

கச்சியப்பரால் எழுதப் பெற்ற கந்தபுராணம்,முருகப் பெருமான் திருக் கதையைத் தமிழில் முழுதும் உரைப்பது!
அதில் கடைசிப் படலம் வள்ளியம்மை திருமணப் படலம்! அதில் வள்ளியின் பிறப்பு பற்றிய நிகழ்வுகளைத் தொகுத்துச் சொல்லி உள்ளார்!

திருமாலின் மானசீகப் புதல்வியர் இருவர் அமிர்தவல்லி, சுந்தரவல்லி!
இவர்கள் முருகனை விரும்பி அவனையே மணாளனாகக் கொள்ளத் தவம் இருந்தனர்!

முன்னவள் பிறந்து, யானையின் பார்வையில் வளர்க்கப் பெற்று, தேவேந்திரன் மகளாக வளர்க்கப்படுகிறாள்!
பின்னவள் பிறந்து, மானின் கருவில் உருவாகி, வேடர்குலத் தலைவன் நம்பியால் வளர்க்கப்படுகிறாள்!

சுந்தரவல்லி என்ற விழைந்த ஆன்மா, அந்த விழை பொருளை அடைய நோற்க வேண்டும்! அதனால் உயிராகப் பிறக்க வேண்டும்! இப்படிப் பிறக்கும் போது இன்னொருவர் விழைவால் இவள் உண்டானதாக இருத்தல் ஆகாது! ஏன்னா இவள் தன் தனிப்பட்ட விழைவுக்காகவே தாமாகவே பிறவி நோற்கிறாள்! இதை எப்படிச் சொல்வது? அறி-புனை தான் கை கொடுக்கிறது!

சிவமுனி என்ற முனிவர், கானகத்தில் தன் பழைய இல்லற வாழ்வை எண்ணிச் சற்றே சலனப் படுகிறார்! ஒருவர் எண்ணமே அவர் விழைந்ததாக ஆனபடியால், அங்குள்ள மானின் கருவிலே, வள்ளியின் உயிர் வந்து தங்கி விடுகிறது!

அந்த மான், வள்ளிக் கிழங்குச் செடிகள் நிறைந்த குழிக்குள்ளே பிரசவிக்கிறது! இப்படி வள்ளிக்கொடிகள் நிறைந்த இடத்திலே இவளை நம்பியின் குடும்பம் கண்டதால் "வள்ளி" என்று பேரிட்டு வளர்க்கப்படுகிறாள்!

இவ்வளவு தான்! இதில் நெருடலோ, தீமையோ, ஆபாசமோ ஏதுமில்லை! அறி-புனைக் கதைகள் போலவே இவையும் புனைவும் நிகழ்வும் ஒருங்கு கூடிய கதைகள் தான்!

நீங்கள் சொன்னது போல், திருமால் கீழே வந்து, இலக்குமி மானாய் வந்து என்பதெல்லாம் அவரவர் இன்னும் வசதியாக ஏற்றிக் கொண்டது! :))

கச்சியப்பரின் கந்த புராண வரிகள் கீழே:

நற்றவன் காட்சி தன்னால் நவ்வி பால் கருப்பம் சேரத்
தெற்றென அறிதல் தேற்றிச் "செங்கண்மால்" உதவும் பாவை!

மானி டத்தின் வரு மைந்தன் முந்துநீ
மானி டத்தின் வருக என்ற வாய்மையான்
மானி டத்தின் வயின் அடைந்தாள் மரு
மானி டத்தின் மானாகும் அம் "மான்மகள்"!

தோன்றலுக்குத் துணைவியைத் தொல் விணை
தான் தரித்துத் தளர்ந்து தளர்ந்து போய்
மான்ற ரற்றி உயிர்த்து வயிறு நொந்து
ஈன்று வள்ளி இருங்குழி இட்டதால்...

மாண்புமிகு பொதுஜனம் said...

நெடிய விளக்கத்திற்கு மிக்க நன்றி கேஆரெஸ் அவர்களே.
நீங்களே தெளிவாகக் கூறி விட்டீர்கள்,"திருமால் முனிவராகவோ, இலக்குமி மானாகவோ எல்லாம் பிறக்கவில்லை! இதெல்லாம் ஒரு கதையைச் சொல்லும் போது, ரசத்தை அவரவர் கூட்டிக் கூட்டி, பாமரர்களும், படித்த "பகுத்தறிவாளர்களுமே" தாமாகப் புனைந்து கொள்வது தான்!"என்று.


நான் கந்த புராணம் படிக்கவில்லை. எனக்குத் தேவையுமில்லை.நான் அன்றாடம் வணங்கும் முருகனோ,அவனது தேவியரோ இப்படியெல்லாம் பிறக்கவில்லை என்று சத்தியமாக நம்புகிறேன்.அதைத் தவிர்த்து இப்படிப்பட்ட அறி‍‍‍‍ புனைக் கதைகள் ஊடாக ஒருவரின் பிறப்பினை விளக்கம் சொல்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

கச்சியப்பர் கந்தபுராணத்தை எழுதியிருக்கலாம்.ஆனால் இயற்கைக்கு ஒவ்வாத நிகழ்வுகள் அவரால் புனையப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்.வள்ளியின் பிறப்பு பற்றிய நிகழ்வுகளும் அவ்வாறே என்று நம்புகிறேன்.

என்னைப் போன்ற பாமரனுக்கெல்லாம் மூத்த பதிவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன்.அதைப் பொய்யாக்கிய தங்களுக்கு இச்சிறியேனின் பணிவான வணக்கங்கள்.

மாண்புமிகு பொதுஜனம் said...

கோவி.கண்ணன் said...

..//புராணங்களை உண்மை என்று நம்புவோர் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் ஆராய்ச்சி எல்லாம் நடத்தக் கூடாது !//...

இறைவனை நம்புவதற்கு இப்படிப் புனையப்பட்ட புராணங்கள் எனக்குத் தேவை இல்லை.

இறைவன் இருக்கிறான்.இது சத்தியமான உண்மை.ஆனால் இத்தகைய புராணங்களை நான் நம்பவில்லை.
நன்றி கோவிகண்ணன் அவர்களே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//உருவ வழிபாடு தவறு என்னும் ஆத்திகர்கள் மேற்கண்ட கதை வெறும் உருவகம் என்பார்கள், வள்ளி இச்சா சக்தி, தெய்வானை கிரியா சக்தி, முருகன் பரப்பிரம்மம் என்பார்கள்//

கோவி அண்ணா
முருகனை ஞான சக்தி என்று தான் சொல்வார்கள்!
இச்சை(விழைவு), கிரியை(செயல்) இரண்டையும் இயக்கும் ஞானம்!
எங்கோ ஒருவரிடம் கேட்டு விட்டு, நீங்களா சும்மாங்காட்டியும் இப்படித் தான் சொல்வாய்ங்க-ன்னு வழக்கம் போல அடிச்சி விடக் கூடாதுண்ணே! எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் கந்த புராணம் படிக்கவில்லை. எனக்குத் தேவையுமில்லை//

கந்தனைப் படிப்பது ஒரு வகை! பிடிப்பது இன்னொரு வகை!
பிடிப்பதே ஏற்றம்! நீங்கள் பிடிப்பது கண்டு மகிழ்ச்சி!

//என்னைப் போன்ற பாமரனுக்கெல்லாம் மூத்த பதிவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன்.அதைப் பொய்யாக்கிய தங்களுக்கு இச்சிறியேனின் பணிவான வணக்கங்கள்//

ஹா ஹா ஹா
பகவத் பக்தியில் தனிப்பட்ட ஆளு-பெரியேன்/சிறியேன்-ன்னு எல்லாம் ஒன்னுமே இல்லீங்க! ஆட்களை விட அறிவதே முக்கியம்!

உங்க மன நெருடலில் எழுந்தது கேள்வி! மால் மருகன் வருடலில் வந்தது பதில்! அவ்வளவே!

அடியவர் தம்மொடு கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

கோவி.கண்ணன் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//உருவ வழிபாடு தவறு என்னும் ஆத்திகர்கள் மேற்கண்ட கதை வெறும் உருவகம் என்பார்கள், வள்ளி இச்சா சக்தி, தெய்வானை கிரியா சக்தி, முருகன் பரப்பிரம்மம் என்பார்கள்//

கோவி அண்ணா
முருகனை ஞான சக்தி என்று தான் சொல்வார்கள்!
இச்சை(விழைவு), கிரியை(செயல்) இரண்டையும் இயக்கும் ஞானம்!
எங்கோ ஒருவரிடம் கேட்டு விட்டு, நீங்களா சும்மாங்காட்டியும் இப்படித் தான் சொல்வாய்ங்க-ன்னு வழக்கம் போல அடிச்சி விடக் கூடாதுண்ணே! எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு! :))
//

என்ன கேஆர்எஸ், பரப்பிரம்மத்திற்கு ஞான சக்திக்கும் தொடர்ப்பு இல்லையா ?

சொற்குற்றம் பொறுத்துக் கொள்ளலாமே !
:)

மெய்பொருளை காணவெல்லாம் முடியாது, உணரத்தான் முடியும். நீங்களும் முயற்சி செய்யுங்கோ !
:)

கோவி.கண்ணன் said...

//இத்தகைய புராணங்களை நான் நம்பவில்லை.
நன்றி கோவிகண்ணன் அவர்களே.//

புராணங்கள் வழி சில சமயப் பண்டிகைகளையும் விழாக்களையும் நடத்துகிறார்கள். எனவே அவற்றின் தேவை மக்கள் ஒருங்கிணைப்பு என்ற அளவில் வைத்துக் கொள்ளலாம், புராணங்களை ரொம்ப போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

மாண்புமிகு பொதுஜனம் said...

நன்றி கேஆரெஸ் மற்றும் கோவிகண்ணன்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment